ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நாட்டு நாய் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்தியூர் அடுத்த மைக்கேல்பாளையம், கழுதைப்பாலி, ஜி.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (62). இவர், ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை தென்னை மரத்துக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்தார். அப்போது, அந்தியூர், புதுக்காடு, காந்திநகரைச் சேர்ந்த தேவராஜ் மகன் அண்ணாதுரை (27), சுந்தரமூர்த்தி மகன் மோகன்ராஜ் (26) ஆகியோர் அங்கு வந்தனர்.
மேலும், அண்ணாதுரை, மோகன்ராஜிடம் மாணிக்கத்தின் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த வெள்ளை நிறத்தில் உள்ள நாட்டு நாயை சுடுமாறு கூறியுள்ளார். இதனால், மோகன்ராஜ் தான் வைத்திருந்த ஏர்கன் மூலம் நாயின் தலை, வயிற்றுப் பகுதிகளில் சுட்டார். இதில், பலத்த காயம் அடைந்ததில் மயங்கி விழுந்த நாய் அதே இடத்தில் உயிரிழந்தது.
இதுகுறித்து, மாணிக்கம் அந்தியூர் போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு (போக்டா) சட்டம் உள்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அண்ணாதுரை, மோகன்ராஜை தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments